ராகு, கேது ஆகிய சாயாகிரகங்களுக்கு இடையே அனைத்து கிரகங்களும் பிடிபட்டு இருந்தால் அதற்கு காலஸர்ப்பயோகம் (களத்திரதோஷம்) என்றுபெயர். இது ஸர்ப்பதோஷமாக கருதப்படும்.

இத்தகைய தோஷத்தை நிவர்த்தி செய்ய ராகு,கேது ஆகிய கிரஹங்களில் எந்த கிரஹம் தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை முதலில் கண்டறியவும். ராகு,கேது கிரஹங்கள் நேருக்கு நேராக, எதிர்புறமாக சஞ்சாரம் செய்யக்கூடியவை. ஆதலால் எந்த கிரஹத்தின் பிடியில் மற்ற கிரஹங்கள் உள்ளன என்பதை ஆராய்ந்து, அறிந்து அதற்கு தகுந்தவாறு பரிகாரம் செய்ய வேண்டும்.

கேதுபகவான் தோஷமாக இருந்தால்….

இத்தகைய தோஷத்தை நிவர்த்தி செய்ய, இவரது அதிதேவதையான ஸ்ரீவிநாயகர் பெருமானையும், ஸ்ரீசண்டிகேச்வரரையும், தினந்தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபட நிவர்த்தியாகும். (வெள்ளிக்கிழமை சிறந்தது).

மேலும் கேதுபகவான் தோஷத்தை நிவர்த்தி செய்ய அருகில் உள்ள சிவன் ஆலயங்களுக்குச்சென்று கேதுபகவானுக்கு கொள்ளு தானியம் வைத்து, புள்ளிகளுடைய சிவப்பு (பல நிறங்கள்) வஸ்திரம் அணிந்து, செவ்வல்லி மலர்களால் பூஜை செய்து,வெள்ளிக்கிழமை தோறும் தீபம் ஏற்றி வழிபட ஜாதகத்தில் உள்ள கேது பகவான் களத்திர தோஷம் நிவர்த்தியாகும்.

18 சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ சட்டைமுனி சித்தர், நவகிரகங்களில் கேதுபகவானை பிரதிபலிப்பவர். இவரது படத்தை வைத்து, வெள்ளிக்கிழமை தோறும் தீபம் ஏற்றி முறைப்படி பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. திருவரங்கனின் அருள்பெற்றவரே போற்றி!
2. ஸ்ரீசக்கரத்தை தரிசனம் செய்தவரே போற்றி!
3. தேகத்தைக் காப்பாற்றுவாய் போற்றி!
4. ஜலத்தில் வாசம் செய்பவரே போற்றி!
5. அக்னி பகவானை பூஜிப்பவரே போற்றி!
6. வருண பகவானை வணங்குபவரே போற்றி!
7. நவக்கிரஹங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி!
8. ஸ்ரீ ஸ்கந்தனை வணங்குபவரே போற்றி!
9. கவலைகளை அகற்றுபவரே போற்றி!
10. நோய்களை அழிப்பவரே போற்றி!
11. வில்வ அர்ச்சனைப் ப்ரியரே போற்றி!
12. காம குரோதத்தை அழிப்பவரே போற்றி!
13. சமுத்திரத்தை பூஜிப்பவரே போற்றி!
14. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
15. ராமநாமப்ரியரே போற்றி!
16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீசட்டைமுனி சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!

பிறகு, மூல மந்திரமான “ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றி” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பானகம் அல்லது தேன், கதளி(செவ்வாழை) வைத்து படைத்து, உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும். இவருக்கு பல வர்ணங்கள் கலந்த வஸ்திரத்தை அணிவிக்கலாம்.

இவரை முறைப்படி வழிபட்டால்…..
கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கும். திருமணம் நல்ல முறையில் நடக்கும்.

ராகுபகவான் தோஷமாக இருந்தால்…..

இத்தகைய தோஷத்தை நிவர்த்தி செய்ய, இவரது அதிதேவதையான ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ கருமாரியம்மன் இவர்களை தினந்தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபட நிவர்த்தியாகும். (சனிக்கிழமை தோறும் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றியும், பால் அபிஷேகம் செய்து வழிபட ஜாதகத்தில் உள்ள கடுமையான சற்பதோஷம் நிவர்த்தியாகும்).

மேலும் ராகுபகவான் தோஷம் நீங்க, அருகில் உள்ள சிவன் ஆலயங்களுக்குச்சென்று ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகு பகவானுக்கு உளுந்து தானியம் வைத்து, கறுப்புடன் சித்திரங்கள் சம்பந்தமான வஸ்திரம் அணிந்து, மந்தாரை மலர்களால் பூஜை செய்து வழிபட தோஷம் நிவர்த்தி ஆகும்.

18 சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ பாம்பாட்டி சித்தர், நவக்கிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர். இவரது படத்தை வைத்து,சனிக்கிழமை தோறும் தீபம் ஏற்றி, அல்லி, தாமரை, தாழம்பூ, சம்பங்கி ஆகிய புஷ்பங்களால் பின்வரும் 16 போற்றிகளைக் கூறி முறைப்படி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. ஸ்ரீ நாகாபரணம் உடைய சிவனை வணங்குபவரே போற்றி!
2. ஆலகால விஷத்திலிருந்து காப்பவரே போற்றி!
3. சர்ப்பரட்சகரே போற்றி!
4. முருகனின் ப்ரியரே போற்றி!
5. பசும்பாலில் பிரியம் உள்ளவரே போற்றி!
6. மூன்று வர்ணங்கள் கொண்டவரே போற்றி!
7. வாக்கில் சுத்தம் உடையவரே போற்றி!
8. ஸ்ரீ ஆதிசேஷனை வணங்குபவரே போற்றி!
9. விஷத்தை முறிப்பவரே போற்றி!
10. நடுநிசியில் சஞ்சரிப்பவரே போற்றி!
11. ஐந்துக்களின் உருவம் உடையவரே போற்றி!
12. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!
13. ஓம் வசி பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
14. சிவனுக்கு ஆபரணமாக இருப்பவரே போற்றி!
15. நந்திதேவரின் நண்பனே போற்றி!
16. ஸ்ரீ பாற்கடலில் வாசம் செய்யும் பூஜ்ய சித்தர் ஸ்ரீபாம்பாட்டி சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!

இவரை முறைப்படி வழிபட்டால்…..
ஜாதகத்தில் ராகுபகவானால் ஏற்படக்கூடிய களத்திர தோஷம் நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.