1. மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் இந்த ஏழு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் இவற்றில் எங்கு இருந்தாலும், செவ்வாய் தோஷம் இல்லை மற்றும் இந்த ஏழு இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

2. மீனம், துலாம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 2ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

3. ரிஷபம், துலாம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 4ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை

4. கன்னி, மகரம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 8ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

5. மிதுனம், கன்னி லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 12ல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

6. செவ்வாயைச் சனி பார்த்தாலும், குரு பார்த்தாலும் தோஷம் இல்லை.

7. பெண்கள் ஜாதகத்தில் 7ம் இடத்திலோ, 8ம் இடத்திலோ செவ்வாய், மற்றும் சூரியன், சனி இவர்களில் ஒன்றோ, பலவோ, நின்றால் கூட 9ம் இடத்தில் ஒரு சுபகிரகம் நின்றால் அந்த ஜாதகிக்கு கணவரது ஆதரவும், புத்திர பாத்திர யோகமும், சுக ஜீவனமும், சந்தோஷமான வாழ்வும் உண்டு என்றும், 2ம் இடத்தில் சுபகிரகம் இருக்குமானால் தோஷம் இல்லை என்றும் திட்டவட்டமாகச் சொல்லப்படுகிறது.

8. பலித மார்த்தாண்டம் என்ற நூலில் சர ராசிகளில் பிறந்தவர்களுக்கு அந்த ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை. புதன் வீட்டில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் ஜோதிடக் கலையை உருவாக்கிய ஸ்ரீ மகாமுனிவர் அகத்தியர் கூறியதை பல ஓலைச்சுவடிகள் மற்றும் ஏடுகளின் மூலமாக அறியலாம்.

ஆனால் இன்று கலியுகத்தில் 2ம்வீடு, 4ம்வீடு, 12ம்வீடு, ஆகியவற்றில் செவ்வாய்பகவான் இருந்தால் பரிகாரத் தோஷமாகவும், 7ம்வீட்டில், 8ம் வீட்டில் இருந்தால் தோஷமாகவும் பெரும்பாலும் கருதப்படுகிறது.

இத்தகைய தோஷத்தை நிவர்த்தி செய்ய, இவரது அதிதேவதையான ஸ்ரீ முருகப் பெருமானை தினந்தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபட நிவர்த்தியாகும். (செவ்வாய்க்கிழமை சிறந்தது).

மேலும் செவ்வாய் தோஷம் நிவர்த்தி செய்ய, அருகில் உள்ள சிவன் ஆலயங்களுக்குச்சென்று, செவ்வாய்கிழமை தோறும் செவ்வாய் பகவானுக்கு துவரை தானியம் வைத்து, நல்ல சிவப்பு (பவள நிறம்) வஸ்திரம் அணிந்து, செண்பக புஷ்பங்களால் பூஜை செய்து, தீபம் ஏற்றி வழிபட நிவர்த்தியாகும்.

ஸ்ரீ பழனி தண்டாயுதபாணியை நவபாஷானத்தால் பிரதிஷ்டை செய்த 18 சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ மகாபோகர், நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானை பிரதிபலிப்பவர். ஸ்ரீ மகாபோகரை செவ்வாய் கிழமை தோறும் முறைப்படி பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. முருகனைக் குருவாகக் கொண்டவரே போற்றி!
2. சித்த வைத்தியத்தின் மூலவரே போற்றி!
3.மகா முனிவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
4. ப்ரணவ ஸ்வரூபமாக இருப்பவரே போற்றி!
5. மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி!
6. மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி!
7. மூலிகை, புஷ்பங்களால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி!
8. ஆம், ஊம் என்ற பீஜக்ஷரங்களில் வசிப்பவரே போற்றி!
9. பசும்பால் பிரியரே போற்றி!
10. நவபாஷானம் அறிந்தவரே போற்றி!
11. ப்ரணவத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
12. நாகதேவதைகளால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
13. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
14. கிரிவலத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
15. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
16. முருகனை தரிசனம் செய்த ஸ்ரீமகாபோகர் சித்தர் சுவாமிகளே போற்றி! போற்றி!

பிறகு மூல மந்திரமான “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமியே போற்றி” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பால் பழம் தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

இவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி புஷ்பங்களால் பூஜை செய்தால் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம் நீங்கி, செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து, நினைத்த காரியம் நிறைவேறும்.

இவரை முறைப்படி வழிபட்டால்…..
1.செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால் திருமணத் தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
2.பழனி தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.